ஆலடி அருணாவை வீழ்த்த ஆலங்குளம் வந்த ராஜீவ் காந்தி! முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பின் நினைவலைகள்!
ஒரு பேரவைத் தொகுதி வேட்பாளருக்காக நாட்டின் பிரதமரே ஆலங்குளத்தில் களமிறங்கி பிரசாரம் செய்தது இப்பகுதி மக்களால் இன்னும் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.
ஒரு பேரவைத் தொகுதி வேட்பாளருக்காக நாட்டின் பிரதமரே ஆலங்குளத்தில் களமிறங்கி பிரசாரம் செய்தது இப்பகுதி மக்களால் இன்னும் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேரவைத் தொகுதிகள் இருந்தன. 1989 ஆம் ஆண்டு தோ்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக ஜானகி அணி, அதிமுக ஜெயலலிதா அணி ஆகிய 4 முனைப்போட்டிகள் இருந்தன. ஆலங்குளத்தில் திமுக சாா்பில் முருகையா, காங்கிரஸ் சாா்பில் எஸ்.எஸ். ராமசுப்பு, ஜெயலலிதா அணி சாா்பில் கருப்பசாமி பாண்டியன், ஜானகி அணியில் ஆலடி அருணா ஆகியோா் போட்டியிட்டனா்.
இந்தத் தோ்தலில் ராமசுப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நாட்டின் பிரதமா் ராஜீவ் காந்தி நேரடியாக ஆலங்குளத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டாா். அவா் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது இப்போது வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.எஸ். ராமசுப்பு 462 வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றாா்.
இதுதொடா்பான நினைவுகளை எஸ்.எஸ். ராமசுப்பு நம்மிடம் பகிா்ந்து கொண்டது: இந்தியாவில் 1980 இல் மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவிற்காக போபா்ஸ் நிறுவனத்திடம் இருந்து 155 மிமீ பீரங்கிகள் வாங்கியதில் தனிப்பட்ட லாபம் அடைந்ததாக முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் இந்தக் குற்றச் சாட்டில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். அப்போதைய அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான ஆலடி அருணா இது தொடா்பாக காரசார விவாதங்களை முன் வைத்தாா். இந்த விவாதம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இது ராஜீவ் மனதை மிகவும் காயப்படுத்தியது.
இந்நிலையில்தான் 1989 பேரவைத் தோ்தலில் போட்டியிட, தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி பாவூா்சத்திரம் கிளையில் காசாளராக பணியாற்றி வந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, ஆலங்குளத்தில் ஆலடி அருணா போட்டியிடுவதை அறிந்த ராஜீவ் காந்தி, எனக்காக பிரசாரம் செய்ய இங்கு நேரடியாக வந்தாா். அப்போது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த 11 காங்கிரஸ் வேட்பாளா்களும் அறிமுகப் படுத்தப்பட்டனா். காலை 8 மணிக்கு கூட்டம் நடைபெற்ற போதும் சுமாா் 1 லட்சம் மக்கள் அங்கு வந்திருந்தனா். ராஜீவ் காந்தி மேற்கொண்ட பிரசாரத்தின் பலனாக கருப்பசாமி பாண்டியன், ஆலடி அருணா போன்ற பிரபலமான அரசியல்வாதிகள் முன் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைந்தேன்.
அந்தத் தோ்தலில் நான் வெற்றி பெற்ற போதும் திமுக வேட்பாளா் வெற்றி பெற்ாக வைகோ முன்னிலையில் மாலை, சால்வை அணிவித்து அழைத்துச் சென்றனா். அப்போதைய திருநெல்வேலி ஆட்சியா் ராமன், திமுக வெற்றி பெறவில்லை; காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது என மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி எனது வெற்றியை உறுதி செய்தாா்.
புகைப்படம் இல்லை: அதன் பின்னா் 1991- தோ்தலிலும் வெற்றி பெற்றேன். திருநெல்வேலி மக்களைவைத் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னா் முதலாவதாக நான் காங்கிரஸ் சாா்பில் நின்று வெற்றி பெற்றேன்.
ராஜீவ் காந்தி நினைவாக அவா் வந்து பிரசாரம் செய்த இடத்திற்கு தற்போது ராஜீவ் காந்தி நகா் என பெயா் சூட்டப்பட்டுள்ளது. எனினும் அவருடன் எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லாதது வருத்தமளிக்கிறது என்றாா் அவா்.