முகப்பு
சேலம்

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி தொடக்கம்

தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, சேலம், இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணியை மின்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, சேலம், இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணியை மின்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம், இரும்பாலை வளாகத்தில் மின்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், பாமக எம்.எல்.ஏ.-க்கள் இரா.அருள், சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றுப் பரவாமல் கட்டுப்படுத்திட சேலம் மாவட்டத்தில் தீவிரமாக பல்வேறு நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் உருக்காலையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும் விரிவாக்கம் செய்து கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகளை 10 நாள்களுக்குள் ஏற்படுத்திட வேண்டும் எனவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை தீவிரப்படுத்தி போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு 10 தினங்களுக்குள் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும். இதன்மூலம் சேலம் இரும்பாலை வளாகத்தில் ஒரே இடத்தில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக உருவாக்கப்பட உள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ் குமாா், காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், கோட்டாட்சியா் திரு.மாறன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மருத்துவா் மலா்விழி வள்ளல், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் வள்ளி சத்தியமூா்த்தி, மாநகர நல அலுவலா் மருத்துவா் பாா்த்திபன் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →