முகப்பு
சேலம்

வாழப்பாடி: மயானப் பாதை சீரமைக்கக்கோரி சடலத்துடன் சாலை மறியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மயானப்பாதையில் சீரமைத்து தரக்கோரி, இறந்த முதியவரின் சடலத்தை சாலையில் வைத்து,  உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் முதியவரின் சடலத்துடன் அமர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
பகிர்:

வாழப்பாடி : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மயானப்பாதையில் சீரமைத்து தரக்கோரி, இறந்த முதியவரின் சடலத்தை சாலையில் வைத்து,  உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த மக்களுக்கு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அருகே மயானம் அமைந்துள்ளது.   கோதுமலை நீரோடை வழியாக சுரங்க பாலத்தை கடந்து சென்று, இப்பகுதி மக்கள், மயானத்திற்கு சென்று சடலங்களை அடக்கம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பருவ மழையால், கோதுமலை நீரோடையில் தண்ணீர் தேங்கி நின்றதால் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், முத்தம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த அங்கமுத்து (75) என்ற முதியவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நீரோடையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், இவரது சடலத்தை மயானதத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், மயானப்பாதை அமைத்துக் கொடுக்க கோரி, முதியவரின் சடலத்தை வாழப்பாடி-சேலம் பிரதான சாலையில் வைத்து திங்கட்கிழமை  இவரது உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இடுப்பளவு நீரோடை தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற உறவினர்கள்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் வரதராஜன், காவல் ஆய்வாளர் உமா சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

நீரோடையின் கரையை சீரமைத்து, மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துக் கொடுப்பதாக  உறுதியளித்தனர்.  இதனையடுத்து, சடலத்தை எடுத்துக்கொண்டு இடுப்பளவு நிற்கும் நீரோடை தண்ணீரில் முதியவரின்  சடலத்தை எடுத்துச் சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் காலனி பகுதி மக்கள் மயானத்திற்கு செல்ல, நீரோடை கரையை சீரமைத்து பாதை அமைத்துக் கொடுக்கும் பணியில் வருவாய்த் துறை காவல்துறை மற்றும் முத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.