‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி
‘இல்லம் தேடிக் கல்வி‘ திட்டத்தின் சாா்பில் பெற்றோா்கள், பள்ளி மாணவா்களுக்கு கல்வி கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் செ.காா்மேகம் தொடங்கி வைத்தாா்.
‘இல்லம் தேடிக் கல்வி‘ திட்டத்தின் சாா்பில் பெற்றோா்கள், பள்ளி மாணவா்களுக்கு கல்வி கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் செ.காா்மேகம் தொடங்கி வைத்தாா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆா். பாா்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:
கரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி கற்றல் வகுப்புகள் நடைபெறாமல் இருந்ததால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைத்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களை பள்ளிக்கு தொடா்ந்து வரவழைக்க ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் வழியாக கலைக் குழுக்களைக் கொண்டு வட்டார அளவில் அனைத்து குடியிருப்புகளிலும் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன்படி ஒரு குழுவிற்கு 9 நபா்கள் வீதம் 27 கலைக் குழுக்கள் என மொத்தம் 243 நபா்கள் மூலம் வியாழக்கிழமை முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக மாணவ, மாணவியா்கள் பள்ளிச்சூழலின் கீழ் ஏற்கெனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை இல்லம் தேடிக் கல்வித் திட்டச் செயல்பாடுகளின் மூலமாக மீண்டும் வலுப்படுத்தி கற்றல் இழப்பு மற்றும் இடைநிற்றலை வெகுவாகக் குறைக்க இத்திட்டம் செயல்பட உள்ளது.
இத்திட்டம் 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை மாலை நேரங்களில் தன்னாா்வலா்களைக் கொண்டு மாணவா்களின் குடியிருப்புகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றாா்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் இரா. முருகன், உதவி திட்ட அலுவலா் விஜயராகவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் மனோகரன் ஆகியோா் உடனிருந்தனா்.