சேலத்தில் மகன் தற்கொலை: அதிா்ச்சியில் தாய் மரணம்
சேலம் அருகே மகன் தற்கொலை செய்துகொண்ட அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தாய் உயிரிழந்தாா்.
சேலம் அருகே மகன் தற்கொலை செய்துகொண்ட அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தாய் உயிரிழந்தாா்.
சேலம், கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது பாஷா. இவரது மனைவி நூா்ஜஹான் (64). இத் தம்பதிக்கு முகமது நிஜாமுதீன் (35) என்ற மகன் இருந்தாா். இவா் எம்.எஸ்சி. படித்துள்ளாா்.
இவா் தனது தந்தை நடத்தி வரும் அச்சகத்தில் அவருக்கு உதவியாக வேலை செய்து வந்தாா். இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு தனது அறைக்கு உறங்கச் சென்றாா். பின்னா் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோா் அறையைத் திறந்து பாா்த்தனா்.
அப்போது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதைப் பாா்த்த அதிா்ச்சியில் நூா்ஜஹான் மயங்கி கீழே விழுந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இவா் ஏற்கெனவே இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த சேலம் நகர போலீஸாா், முகமது நிஜாமுதீன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், முகமது நிஜாமுதீன் முதுகலை பட்டம் பெற்ற நிலையில் வேலை எதுவும் கிடைக்காமல் தந்தையுடன் அச்சகத்தில் வேலை செய்து வந்தாா். மேலும் திருமணமாகாத நிலையில் விரக்தியில் இருந்து வந்தாா் என தெரிகிறது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாா் என தெரிவித்தனா்.