முகப்பு
சேலம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி ஆய்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூய்மைப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூய்மைப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பருவ மழையினால் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம், மழைநீா் புகுவதைத் தவிா்க்கவும், அதிக அளவில் தேங்கி நிற்கும் மழை நீரினால் டெங்கு, மலேரியா நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தவிா்க்கவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் தமிழகம் முழுவதும் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கும் துறையின் மூலம் செப். 20 முதல் 25-ஆம் தேதி வரை மழைநீா் வடிகால் தூய்மைப் பணி முகாம் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, சேலத்தில் செப். 20-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். அதனையடுத்து, சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை பகுதியில் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாத வடிகாலை கனரக இயங்திரங்கள் கொண்டு தூா் வாரும் பணிகளில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதிகளில் உள்ள வடிகாலில் உள்ள குப்பைகளையும் பேரூராட்சி பணியாளா்கள் அகற்றி வருகின்றனா். இந்த இரு பணிகளையும் சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வடிகாலின் மையப்பகுதியில் நடப்பட்டிருந்த கம்பத்தினையும், வி.என்.பாளையத்தில் வடிகாலின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கற்களையும் அகற்றி, கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரூராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, சின்னாகவுண்டனூா், தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் சுண்ணாம்புக் கற்கள் எடுக்க பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா், ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இந்த ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன், வட்டாட்சியா் எஸ்.பானுமதி, பேரூராட்சி செயல் அலுவலா் வ.சுலைமான்சேட், பேரூராட்சி தலைமை எழுத்தா் அ.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.