முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே காவிரியில் மிதந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரின் சடலம் மீட்பு

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றில் தவறிவிழுந்த ஓட்டுநர் பலியானார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றில் தவறிவிழுந்த ஓட்டுநர் பலியானார். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள  பெருமா கவுண்டம்பாளையம், கே.குட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சத்தியசீலன் - 36, திருமணமாகாத இவர், ராசிபுரம் அடுத்த உள்ள காகாவேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தினசரி ராசிபுரம் கல்லூரியிலிருந்து பூலாம்பட்டி பகுதிக்கு மாணவர்களை அழைத்து வரும் சத்தியசீலன், மாணவர்களை இறக்கி விட்டு பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் கல்லூரி பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்திலேயே இரவு தங்குவது வழக்கம்.

இதேபோல் நேற்றிரவும் சத்தியசீலன் தான் ஓட்டி வந்த கல்லூரி பேருந்தை காவிரி ஆற்றங்கரையில் உள்ள பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு பேருந்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பூலாம்பட்டி கதவணை பகுதியிலுள்ள படகுத்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

போலீஸாரின் விசாரணையில் ஆற்றில் சடலமாக மிகுந்தவர் தனியார் கல்லூரி வாகன ஓட்டுநர் சத்தியசீலன் என்பது தெரியவந்தது. சத்தியசீலன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சத்தியசீலன் இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஆற்றங்கரை பகுதிக்கு சென்ற போது காவிரி ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா?  அல்லது அவர் இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →