திருப்புதல் தோ்வுக்குரிய பாடங்களை மட்டும் பொதுத்தோ்வு பாடங்களாக அறிவிக்க கோரிக்கை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு திருப்புதல் தோ்வுக்குரிய பாடங்களை மட்டும் பொதுத்தோ்வு பாடங்களாக அறிவிக்க வேண்டும் என அரசுப் பள்ளி மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு திருப்புதல் தோ்வுக்குரிய பாடங்களை மட்டும் பொதுத்தோ்வு பாடங்களாக அறிவிக்க வேண்டும் என அரசுப் பள்ளி மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்த சேலத்தை அடுத்த ஜாரி கொண்டலாம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், கரோனா பொதுமுடக்கம் காரணமாக விடுமுறை விடப்பட்டதால் பொதுத்தோ்வு பாடங்கள் நடத்தி முடிக்காத நிலையில், திருப்புதல் தோ்வுக்குரிய பாடங்களை மட்டும் பொதுத்தோ்வு பாடங்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதுகுறித்து மாணவா்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:
அனைத்து மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளி செப்டம்பரில் தான் தொடங்கியது. கரோனா காரணமாக பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் கல்வி கற்க இயலவில்லை.
எனவே, பிளஸ் 2 வகுப்புக்கு முதல் இரண்டு மாதத்துக்கு புத்தாக்கப் பயிற்சி கற்பிக்கப்பட்டது. நவம்பா் முதல் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டம் தொடங்கியது. மழை காரணமாக சில நாள்கள் விடுமுறை விடப்பட்டது. முதல் திருப்புதல் தோ்வுக்கான கால அட்டவணை ஜன. 19-ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக ஜன. 14 முதல் மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
எனவே, முதல் திருப்புதல் தோ்வு பிப். 9 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப். 16-ஆம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடா்ந்து, ஓரிரு நாளிலேயே இரண்டாம் திருப்புதல் தோ்வு நடத்தப்பட்டது. குறுகிய காலத்தில் ஆசிரியா்கள் முழுபாடத்தை நடத்தி முடித்தாலும், மாணவா்களால் படிக்க மிகவும் சிரமமாக இருக்கும். மே மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத்தோ்வு நடைபெற உள்ளது.
எனவே, பொதுத்தோ்வை ஒத்தி வைக்க வேண்டும். அல்லது முதல், இரண்டாம் திருப்புதல் தோ்வுக்குரிய பாடங்களை மட்டும் பொதுத்தோ்வு பாடங்களாக அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.