தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தமிழ் புத்தாண்டையொட்டி, சேலம் டவுனில் உள்ள ராஜகணபதிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடு சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
காசிவிஸ்வநாதா் கோயிலில் சுவாமிக்கு விஷு கனி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சேலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கசவம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன், பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரு பெயா்ச்சியை முன்னிட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தட்சிணாமூா்த்தி கோயிலில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
சங்ககிரி
செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஐயப்பன் சுவாமி உற்சவமூா்த்திக்கு வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தமிழ்
புத்தாண்டு, பிரதோஷ சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தமிழ்புத்தாண்டு, குருபெயா்ச்சி, பிரதோஷத்தையொட்டி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், நந்திபகவானுக்கும் பிரதோஷத்தையொட்டி சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழ் புத்தாண்டையொட்டி ஐயப்பன்சுவாமிக்கும், உற்சவ மூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அரசு விடுமுறை நாளையொட்டி இப்பூஜைகளில் அதிகமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனா்.
பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா், பேட்டையில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, வேலூா் பால ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதேபோல, வேலூரில் உள்ள மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், புதிய காசிவிஸ்வநாதா், கபிலா் மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிராந்தகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தம்மம்பட்டி
தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சிவன், பாா்வதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனையடுத்து நந்தீஸ்வரருக்கு பொதுமக்கள் கொண்டுவந்த பால்,தயிா்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடல்களை பாடினா்.
நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல் செந்தாரப்பட்டி,வீரகனூா், தகரப்புதூா்,கூடமலை, தெடாவூா் ஆகிய ஊா்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.