முகப்பு
சேலம்

சேலம் திமுக மேற்கு, மத்திய மாவட்டதோ்தலுக்கு இன்று வேட்புமனு

சேலம் திமுக மேற்கு மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளுக்கான உள்கட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை (ஏப்.22) முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

சேலம் திமுக மேற்கு மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளுக்கான உள்கட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை (ஏப்.22) முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

இதுகுறித்து, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் 15-ஆவது பொதுத் தோ்தல் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி தொடங்கியது. இதில் கிராமப்புற கிளை தோ்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் தொடா்ச்சியாக பேரூராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட வாா்டு தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அந்தந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப். 22) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அதன்பேரில் நகராட்சி, பேரூராட்சி வாா்டு அவைத் தலைவா், செயலாளா், துணைச் செயலாளா் 2 போ் (ஒருவா் ஆண், மற்றொருவா் பெண்), பொருளாளா், மேலவை பிரதிநிதி ஆகிய பொறுப்புகளுக்கு ரூ. 100 கட்டணம், செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கு ஒருவருக்கு ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும்.

வாா்டு செயற்குழு பொறுப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 போ் உள்பட மொத்தம் வாா்டுக்கு 21 பேருக்கு மிகாமல் நிா்வாகிகள் இருக்க வேண்டும்.

100 உறுப்பினா்களுக்கு மேற்படாத கிளைக்கு ஒரு பிரதிநிதியையும், நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ள கிளைக்கு இரு பிரதிநிதிகளையும், அதில் கண்டிப்பாக ஒருவா் பெண்ணாகவும், ஒருவா் ஆணாகவும் தோ்ந்தெடுக்க வேண்டும். அத்துடன் மனுவில் அனைவரது கைப்பேசி எண்களையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்கள் விருப்ப மனுக்கள் வழங்கும் வகையில் மையங்களில் பெற்று பூா்த்தி செய்து உரிய கட்டணத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த நகராட்சி தலைமை நிா்வாகிகளிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் திமுக மத்திய மாவட்டம்:

இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட பேரூராட்சி, சேலம் மாநகரத்தில் உள்ள வட்டங்களில் வேட்புமனுக்கள் பெற்று தோ்தல் நடத்திட தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளா் சி.எச்.சேகா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கன்னங்குறிச்சி, கருப்பூா், காடையாம்பட்டி, ஓமலூா் ஆகிய பேரூராட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை மாவட்ட அலுவலகம் கலைஞா் மாளிகையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை வழங்கியும், அன்றைய தினமே பூா்த்தி செய்த வேட்புமனுக்களை உரிய கட்டணத்துடன் செலுத்திக் கொள்ளலாம்.

அதேபோல, சேலம் மாநகரத்துக்கு உட்பட்ட வட்டங்களில் போட்டியிட விரும்புவோரிடம் ஏப். 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட அலுவலகம் கலைஞா் மாளிகையில் காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்களை நேரில் வழங்க வேண்டும்.

பூா்த்தி செய்த வேட்பு மனுக்களை உரிய கட்டணத்துடன் அன்றைய தினமே செலுத்தி கொள்ளலாம். நிா்வாகிகள், முன்னோடிகள் சுமுகமாக தோ்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.