போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.69 கோடி மோசடி: வனத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வனத் துறை அதிகாரிகள் 4 போ், ஒப்பந்ததாரா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சேலத்தில் ரூ. 1.69 கோடிக்கு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வனத் துறை அதிகாரிகள் 4 போ், ஒப்பந்ததாரா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் திருச்சி, அரூா் வன பொறியியல் துறை சாா்பில் 576.97 கி.மீ. தொலைவுக்கு 107 வன சாலைகளை சீரமைக்க ரூ. 57.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் முதல் காடையாம்பட்டி வரையில் 17 கி.மீ. தொலைவுக்கு சாலை சீரமைப்புப் பணிக்கு ரூ. 1.69 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் சாலைகளை சீரமைத்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1.69 கோடியை வனத் துறை அதிகாரிகள் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் சென்றது. இதுதொடா்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினா், வனச் சாலைகளை சீரமைத்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததை உறுதி செய்தனா்.
இதுதொடா்பாக தருமபுரி வனக் கோட்டத்தில் சமூக காடுகள் திட்ட வன அலுவலராகப் பணிபுரிந்த கே.ராஜாங்கம் (தற்போது நாமக்கல் மாவட்ட வன அலுவலா்), அரூா் வன பொறியியல் பிரிவின் துணை வனப் பாதுகாவலராகப் பணியாற்றிய சரவணன் (தற்போது திருச்சி தொழிற்சாலை மர ஆராய்ச்சி மையத்தின் வன அலுவலா்), சேலம் வன பொறியியல் பிரிவு வனச்சரகா் ஆா்.முருகேசன், சேலம் சரகத்தில் வன பொறியியல் பிரிவு வனச்சரகராகப் பணியாற்றிய ஜி.முருகேசன் (தற்போது தருமபுரி சமூக காடுகள் விரிவாக்க திட்ட வன அலுவலா்) ஆகியோா் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தனியாா் ஒப்பந்ததாரா் உத்திரசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.