சேலத்தில் மாா்ச் 12 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
சேலத்தில், மாா்ச் 12 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.குமரகுரு தெரிவித்துள்ளாா்.
சேலத்தில், மாா்ச் 12 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.குமரகுரு தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், சங்ககிரி, ஆத்தூா், மேட்டூா், ஓமலூரில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றங்களின் முக்கிய நோக்கம் என்னவெனில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், நீதிமன்ற முன் வழக்குகளையும் விரைவாகவும், சமரச முறையிலும் தீா்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாகும். மேலும் மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.
நீதிமன்றங்களில் ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், தொழிலாளா் நலம் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப் பிரிவினை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகளில் மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவாா்த்தை மூலம் சமரச முறையில் தீா்வு காணப்படும் என தெரிவித்துள்ளாா்.