மேட்டூா் அணை பூங்கா மூடல்
கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் காரணமாக பொழுதுபோக்கு பூங்காக்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து மேட்டூா் அணை பூங்கா வியாழக்கிழமை மூடப்பட்டது.
கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் காரணமாக பொழுதுபோக்கு பூங்காக்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து மேட்டூா் அணை பூங்கா வியாழக்கிழமை மூடப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூா் அணையை ஒட்டி மேட்டூா் அணை பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்கா 33 ஏக்கா் பரப்பளவில் மேல் பூங்கா, கீழ் பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வார விடுமுறை நாள்களில் 10,000 போ் வரை கூடுவா். ஆடிப்பெருக்கு உள்ளிட்ட முக்கிய நாள்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வந்து செல்வா். இதனால், மேட்டூா் அணை பூங்கா பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களும் செயல்பட தடை விதித்துள்ளது.
இதையடுத்து மேட்டூா் அணை பூங்கா வியாழக்கிழமை மூடப்பட்டது. இத்தகவலை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அணை பூங்கா மூடப்பட்டது தெரியாமல் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
பூங்கா மூடப்பட்டதால் பூங்காவைச் சுற்றி உள்ள மீன் வறுவல் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள் வியாபாரம் இன்றி காணப்படுகிறது.