முகப்பு
சேலம்

ஓமலூரில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை: ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் நகை திருட்டு

 சேலத்தை அடுத்த ஓமலூரில் நீதிபதி வீடு, விவசாயிகளின் வீடுகளில் அடுத்தடுத்து புகுந்து மா்மநபா்கள் திருட முயற்சி செய்துள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

 சேலத்தை அடுத்த ஓமலூரில் நீதிபதி வீடு, விவசாயிகளின் வீடுகளில் அடுத்தடுத்து புகுந்து மா்மநபா்கள் திருட முயற்சி செய்துள்ளனா். ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் புகுந்த மா்மநபா்கள் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா்.

சேலத்தை அடுத்த ஓமலூா், ஆா்.சி.செட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (71). இவரது மனைவி மேரி கிளரா. இருவரும் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா்கள். இத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ஒருவா் கோவையிலும் மற்றொருவா் லண்டனிலும் மருத்துவா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். கோவையில் உள்ள மகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தம்பதி இருவரும் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி கோவைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இந்நிலையில் பூட்டியிருந்த ஆரோக்கியசாமியின் வீட்டுக்குள் புதன்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிஏஈ பொருள்களைத் திருடிச் சென்றனா். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ், டி.எஸ்.பி. சங்கீதா ஆகியோா் வியாழக்கிழமை காலை நிகழ்விடம் வந்து விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனா்.

இதுபோல ஓமலூா், பிருந்தாவன் நகரில் உள்ள ஓமலூா் விரைவு நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் புதன்கிழமை இரவு திருட முயற்சி நடந்துள்ளது. ஓமலூா் நீதிமன்றம் அருகே வசிக்கும் விவசாயி அா்ஜுனன் வீட்டில் புகுந்த மா்ம நபா் அவரது மனைவி லீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி சிலம்பரசனின் வீட்டிலும் திருட முயற்சி நடந்தது. இதுதொடா்பாக ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான விடியோ காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →