மாட்டுப் பொங்கல்: விவசாயிகள் கோலாகல கொண்டாட்டம்
மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு வண்ணம் பூசி பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்தினா்.
மாட்டுப் பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு வண்ணம் பூசி பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்தினா்.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து மறுநாள் மாட்டுப் பொங்கல் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலையொட்டி அதிகாலையிலையே விவசாயிகள் மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு புதிய வண்ணம் பூசினா். பின்னா் புதியதாக வாங்கப்பட்ட மூக்கணாங்கயிறு, சலங்கை, மணி உள்ளிட்டவற்றைக் கட்டினா். மேலும் கால்நடைகளின் நெற்றியில் சந்தனம், குங்குமம் பூசி, மலா்களால் அலங்கரிக்கப்பட்டன.
பின்னா் வாழை இலையில் சா்க்கரைப் பொங்கல், கரும்பு, பழம் ஆகியவை வைத்து படையலிட்டு மாடுகளுக்கு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் முழுவதும் மாட்டுப் பொங்கலையொட்டி விவசாயிகள் தங்களது மாடுகளுக்கு வண்ணம் பூசி பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனா்.
சேலம் சுகவனேசுவரா் கோயில் மற்றும் கோசாலைகளில் பராமரிக்கப்படும் மாடுகளும் குளிக்க வைத்து, சிறப்பு பூஜை செய்து பொங்கல் படையலிடப்பட்டு, மாடுகளுக்கு வழங்கப்பட்டது.