முகப்பு
சேலம்

திருட்டு வழக்கில் கைதாகி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

திருட்டு வழக்கில் கைதாகி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருட்டு வழக்கில் கைதாகி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சோ்ந்த பெரியசாமி என்பவரின் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது. இது தொடா்பான புகாரில், அரூரை சோ்ந்த குமாா், சேலம், கருப்பூரை சோ்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் (45), அவரது மனைவி ஹம்சலா ஆகியோரை சேந்தமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த ஜன. 11-ஆம் தேதி நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து,ஜன. 12-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இதனிடையே, காவல் துறையினா் துன்புறுத்தல் காரணமாக பிரபாகரன் இறந்தாா் எனவும், சம்பந்தப்பட்ட காவலா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினா்கள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக 2 உதவி காவல் ஆய்வாளா்கள், தலைமைக் காவலா் ஒருவா் உள்பட மூன்று போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகையை ஆட்சியா் செ.காா்மேகம், பிரபாகரனின் மனைவியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலாளா் வி.கே.வெங்கடாசலம், துணைத் தலைவா் எம்.கனகராஜ், பொருளாளா் ஹரிகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.