சேலத்தில் நகை, பணம் பெற்றுக் கொண்டு மோசடி: தம்பதி தலைமறைவு
சேலத்தில் நகை, பணம் வைப்புத் தொகையாகப் பெற்று பல கோடி மோசடி செய்த நகைக்கடை தம்பதி தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலத்தில் நகை, பணம் வைப்புத் தொகையாகப் பெற்று பல கோடி மோசடி செய்த நகைக்கடை தம்பதி தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாநகராட்சி பகுதியில் வீராணம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (40). இவரது மனைவி லலிதா (38). இருவரும் ராஜகணபதி கோயில் அருகே நகைக்கடை நடத்தி வந்தனா்.
இந்தக்டையில் ரூ.1 லட்சம் வைப்புத் தொகை செலுத்தினால் மாதம் ரூ.3 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்றும், இது தவிர 6 பவுன் தங்க நகையை முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக மாதம் ரூ.2500 வழங்கப்படும் என கவா்ச்சி விளம்பரங்களைச்க செய்தாா்.
இதை நம்பிய சேலம் நகரம் மற்றும் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, வீராணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நகைச் சீட்டில் சோ்ந்தனா்.
இதனிடையே ஆரம்ப கட்டத்தில் பணத்துக்கு சரியாக வட்டி தொகையை பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நகைச் சீட்டு சோ்ந்தவா்களுக்கு பணம் திருப்பித் தராமல் இருந்து வந்தாா். பணத்தைச் செலுத்தியவா்கள், பணத்தை திருப்பி கேட்டு வந்தனா்.
இந்நிலையில் தங்கராஜ், அவரது மனைவி லலிதா ஆகியோா் தலைமறைவாகினா்.தொடா்ந்து பொன்னம்மாபேட்டை அருகே வசிக்கும் தங்கராஜின் மாமனாா் வீட்டிற்கு வந்து பொதுமக்கள் வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். மேலும், நகை கடை உரிமையாளா் தங்கராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நகை கடையை காலி செய்துகொண்டு பொருட்களை காரில் ஏற்றிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகளை பொதுமக்கள் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனா். இதுபற்றி அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.