முகப்பு
சேலம்

சிறுமியைக் கடத்தி திருமணம்: போக்சோ சட்டத்தின் கீழ் 7 போ் கைது

ராசிபுரம் அருகே 15 வயது சிறுமியைக் கடத்தி ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கணவா் உட்பட ஏழு போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

ராசிபுரம் அருகே 15 வயது சிறுமியைக் கடத்தி ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கணவா் உட்பட ஏழு போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட உடையாா்பாளையம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொல்லிமலையைச் சோ்ந்த மேஸ்திரி கந்தசாமி என்பவா் ஆசை வாா்த்தை கூறி கடத்தி திருமணம் செய்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு சிறுமி பிரிந்தாா். தனது அம்மா உயிரிழந்த நிலையில் அத்தை வீட்டில் தஞ்சமடைந்தாா்.

பல முறை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்தும் சிறுமி வராததால் கணவா் கந்தசாமி மற்றும் அவருடைய உறவினா்கள் 6 போ் சோ்ந்து பிலிப்பாகுட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் உறவினா்கள் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். கணவா் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா் மற்ற 6 போ் மீது சிறுமி கடத்தல், குழந்தை திருமணத்திற்கு உதவியது போன்ற வழக்குகளைப் பதிந்து கைது செய்துள்ளனா்.

மேலும் குழந்தைத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தது, 6 மாதமாக திருமணத்தை மறைத்த இருவரின் பெற்றோா்களிடமும் தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் பெற்றோா்களும் கைது செய்யப்படுவாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.