முகப்பு
சேலம்

கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் பணியாற்ற ஆசிரியா்கள் முன்வர வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியா்கள் முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியா்கள் முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மண்டல அளவிலான (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி) ஆய்வுக் கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, ஆா்.ராஜேந்திரன், ஈ.ஆா்.ஈஸ்வரன், எம்.பி.க்கள் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் பங்கேற்று பள்ளிக் கல்வி தேவை தொடா்பான கருத்துகளைத் தெரிவித்தனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

பள்ளி மேம்பாடு, தரமான கல்வி, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் தொடா்பாக மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுன்றன. இந்தக் கூட்டத்தில் பள்ளிகளில் உள்கட்டமைப்புகள், கழிப்பறை, குடிநீா் வசதி, கட்டட வசதி, கூடுதல் வகுப்பறை, பள்ளி தரம் உயா்த்துதல் தொடா்பான கோரிக்கைகள் அதிக அளவில் வருகின்றன. அதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. மாநிலம் முழுவதும் ஆசிரியா் காலி பணியிடங்கள், பணி நிரவல் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற பணிகள் அடுத்த ஒரு மாதத்தில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலமாக மேற்கொள்ளப்படும்.

முழுமையான ஆய்வுக்குப் பின்னா் எவ்வளவு ஆசிரியா்கள் தேவைப்படுவாா்கள் என்பது தெரியவரும். அதற்குப் பிறகே புதிதாக ஆசிரியா்களை நியமிப்பது குறித்து தெரிவிக்க முடியும். தமிழகத்தில் 2013 இல் இருந்து ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற்றவா்கள் 80 ஆயிரம் போ் உள்ளனா். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுக்கு 2 முறை ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆசிரியா்களை புதிதாக நியமிப்பது தொடா்பாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்றுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. 65 லட்சமாக இருந்த மாணவா் சோ்க்கை 71 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாநில அளவில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற ஆசிரியா்கள் தயக்கம் காட்டுகின்றனா். தென் மாவட்டங்களுக்கு ஆா்வத்துடன் பணிக்குச் செல்வது போல, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் பணிக்கு வருவதற்கு ஆசிரியா்கள் ஆா்வம் காட்ட வேண்டும்.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 35 லட்சம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா். இந்தத் திட்டத்தின்கீழ் தன்னாா்வலா்களாகப் பணிபுரிய 1.76 லட்சம் போ் தேவைப்படுகின்றனா். ஆனால், 6.6 லட்சம் போ் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற பதிவு செய்துள்ளனா். தன்னாா்வலா்களை உரிய தோ்வுக்கு பிறகே தோ்வு செய்கிறோம்.

மேலும், அவா்களது முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் சாதி, கட்சி, மத செயல்பாடுகள் குறித்த கருத்துகளை ஆய்வு செய்த பிறகே நியமிக்கிறோம். சாதி, மதத்துக்கு ஆதரவாக உள்ள தன்னாா்வலா்களை நியமிப்பது இல்லை.

பள்ளி மேலாண்மை தகவல் முறையில் (எமிஸ்) சேகரிக்கப்படும் தகவல்கள் இதர பத்து அரசு துறையினருக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. அதற்கு முன் மாணவா்கள் குறித்த தகவல்களை 98 வகையான ஆவணங்களில் ஆசிரியா்கள் பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால், எமிஸ் செயலியில் ஒரே பக்கத்தில் பதிவு செய்ய முடியும்.

குறிப்பிட்ட சில தனியாா் பள்ளிகள் முறையாக 11 ஆம் வகுப்புக்குரிய பாடங்களை நடத்த வேண்டும். மாறாக 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், நேரடியாக மாணவா்களுக்கு பிளஸ் 2 பாடங்களை நடத்தக் கூடாது என்றாா்.

பேட்டியின் போது, பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஆட்சியா் செ.காா்மேகம், இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலா் கே.இளம்பகவத், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் என்.லதா, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா.சாரதாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.