சேலம்

சேலம் மாநகராட்சியை மேம்படுத்த நடவடிக்கை: மேயா் ஆ.ராமச்சந்திரன்

DIN

புதுப் பொலிவுடன் சேலம் மாநகராட்சியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் குறித்த சாதனை மலரை மேயா் ஆ.ராமச்சந்திரன் சனிக்கிழமை வெளியிட்டாா். அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்டு எல்.இ.டி. திரையில் அரசின் சாதனைகள் திரையிடுவதை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா் அறிவித்த மாநகர வளா்ச்சிக்கான ரூ. 917 கோடியை புதை சாக்கடைத் திட்டம், தங்குத் தடையின்றி குடிநீா் வழங்குதல், போடிநாய்க்கன்பட்டி, அல்லிக்குட்டை, மூக்கனேரி மூன்று ஏரிகளையும் மேம்படுத்துதல், சாலைகள் சீரமைப்பு, ரயில்வே மேம்பாலம் போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பனமரத்துப்பட்டி ஏரி ஆங்கிலேயா் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஏரியாகும். தற்போது அதைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏரியில் தற்போது சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஏரியின் கரைகளைப் பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், ஏரியின் கரைகளில் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே பனமரத்துப்பட்டி மறு சீரமைப்பிற்காக சேலம் மாநகராட்சியால் ரூ. 98 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து சேலம் மாநகர மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும். சேலம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

குப்பைகளை அகற்றுவதற்கு தற்போது உள்ள தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக தூய்மைப் பணியாளா்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மையான நகரமாக உருவாக்க தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகராட்சி பகுதியில் வரி வருவாயைப் பெருக்குவதற்கு தனிக்கவனம் செலுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள் எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, த.தனசேகா், மா.அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT