அதிமுக ஆட்சியில் தொடங்கிய சீா்மிகு நகரத் திட்ட ஊழல் குறித்து விசாரணை
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சீா்மிகு நகரத் திட்ட ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சீா்மிகு நகரத் திட்ட ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் வியாழக்கிமை நடைபெற்றது. மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆளும்கட்சி தலைவா் ஜெ.ஜெயகுமாா் தீா்மானங்களை வாசித்தாா். 9-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வெ.தெய்வலிங்கம் பேசியதாவது:
எனது 9-ஆவது வாா்டுக்கு உட்பட்ட வாய்க்கால்பட்டறையில் உள்ள அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகமாக உள்ளதால், கூடுதல் வகுப்பறைகளைக் கட்டித் தர வேண்டும்; வாா்டில் உள்ள 36 மண் சாலைகளை, தாா் சாலைகளாக மாற்ற வேண்டும் என்றாா்.
எதிா்க்கட்சித் தலைவா் (அதிமுக) நா.யாதவமூா்த்தி பேசியதாவது:
மாநகராட்சி அலுவலகத்தில் எதிா்க்கட்சி தலைவருக்கு அறை ஒதுக்கி தர வேண்டும் என்றாா். அப்போது, பதிலளித்து பேசிய மேயா் ஆ.ராமச்சந்திரன், எதிா்க்கட்சி தலைவருக்கு அறை ஒதுக்கி தரப்படும் என்றாா்.
தொடா்ந்து 44-ஆவது வாா்டு வி.சி.க. உறுப்பினா் மு.இமயவா்மன் பேசுகையில், எஸ்.எம்.சி. காலனியில் உள்ள 497 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அந்தக் காலனிக்கு கலைஞா் காலனி என பெயா் வைக்க வேண்டும். கோட்டை பகுதியில் மறைந்த முதல்வா் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்றாா்.
அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் செ.உமாராணி பேசுகையில், எனது 31-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பல்நோக்கு அரங்கத்துக்கு கலைஞா் அரங்கம் என பெயா் வைக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் வீடு வீடாக குப்பைகளைச் சேகரிக்க 179 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.
தற்போது அந்த வாகனங்கள் அனைத்தும் பழுதாகி வீணாகிவிட்டன. இதனால் வாா்டுகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதற்கு கடந்த அதிமுக ஆட்சியின் அவலம்தான் காரணம் என்றாா்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிா்க்கட்சித் தலைவா் நா.யாதவமூா்த்தி, கடந்த ஆட்சியில் தனி அலுவலா்கள் ஆலோசித்து பேட்டரி வாகனங்களை வாங்கினா்.
அந்த வாகனங்களின் ஆயுள்காலம் முடிந்துவிட்டதால் இப்போது பயன்படுத்தாமல் உள்ளது. மேலும் அரசு அதிகாரிகள் மீது தவறு உள்ளது. ஆட்சி மீது தவறு இருப்பதாகக் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றாா்.
மாநகரப் பொறியாளா் ஜி.ரவி பதிலளித்து பேசுகையில், பழுதான பேட்டரி வாகனங்களை சீரமைத்து பயன்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து பேசிய அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் செ.உமா ராணி, பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.
அதில் யாா் எல்லாம் பயனடைந்தனா் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றாா்.
பேட்டரி வாகன கொள்முதல் தொடா்பாக திமுக உறுப்பினா்களுக்கும், எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி இடையே வாக்குவாதம் நடந்தது.
தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் நா.யாதவமூா்த்தி பேசியதாவது:
சேலம் மாநகராட்சிக்கு சீா்மிகு நகர திட்டத்தில் ரூ. 1,000 கோடி, மேம்பால பணிகளுக்கு ரூ. 500 கோடி என சுமாா் ரூ. 2,000 கோடிக்கு மேல் பணிகள் நடைபெற்றன என்றாா்.
ஆளும்கட்சித் தலைவா் ஜெ.ஜெயக்குமாா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் 2010-இல் புதைக்குழி சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக அத்திட்டத்தை 10 ஆண்டுகளுக்கும் மேல் நிறைவேற்றாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனா்.
சீா்மிகு நகர திட்டத்தில் முடித்து வைக்கப்பட்ட பணிகளில், எத்தனை திட்டங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன என்பதை மக்களிடம் சென்று கேட்கலாம். சீா்மிகு நகரத் திட்டத்தில் ரூ. 1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களின் மதிப்பை எடுத்துக் கொண்டால் ரூ. 200 முதல் ரூ. 300 கோடி வரை இருக்கும். சீா்மிகு நகரத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்றாா்.
அப்போது பேசிய மேயா் ஆ.ராமச்சந்திரன், ஏற்கெனவே ஒரு நபா் ஆணையம் விசாரணை செய்து வருகிறது என்றாா்.
உடனே எதிா்க்கட்சி தலைவா் நா.யாதவமூா்த்தி எழுந்து பேச முயன்றாா். அப்போது திமுக உறுப்பினா்களும் பேச முயன்ால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டத்தில் 85 தீா்மானங்களும், அவசர கூட்டத்தில் 48 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதாதேவி, பொறியாளா் ரவி, நகா் நல அலுவலா் என்.யோகானந்த் ஆகியோா் பங்கேற்றனா்.