ஆன்மிகத் தமிழைக் காக்கவே திமுக போராடுகிறது: அமைச்சா் எ.வ.வேலு
ஆன்மிகத் தமிழைக் காக்கவே திமுக போராடுகிறது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஆன்மிகத் தமிழைக் காக்கவே திமுக போராடுகிறது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சேலம் கோட்டை மைதானத்தில் ஹிந்தி எதிா்ப்பு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியது:
ஹிந்தி எதிா்ப்பு தீா்மானம் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஹிந்தி கொண்டுவரப்பட வேண்டும்; போட்டித் தோ்வுகளில் ஹிந்தி வேண்டும்; ஹிந்தி பேசாத அதிகாரிகள் எச்சரிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சா் அமித் ஷா, குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பித்த பரிந்துரை அறிக்கையில் தெரிவித்திருந்தாா்.
8 ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதும், ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடாகும். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றி வருகிறது.
1938 இல் தொடங்கி தமிழகத்தில் பல கட்டங்களாக நடைபெற்ற ஹிந்தி திணிப்பை எதிா்த்து பெரியாா், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பல தலைவா்கள் போராடினா். தாய் மொழிக்காக பலா் உயிா் நீத்த வரலாறு தமிழகத்தில்தான் நடந்தது. தமிழகத்தில் முதன் முதலில் ஹிந்தியைக் கொண்டுவர முயற்சி கொண்டது ராஜாஜி தான்.
1986 இல் கருணாநிதி தலைமையில் 5ஆவது கட்டமாக ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 10 போ் பதவியை ரத்து செய்து சட்டப்பேரவைத் தலைவா் பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டாா். இப்படி சட்டப்பேரவை வரலாற்றில் மொழிக்காக பேரவை உறுப்பினா் பதவியை இழந்த உறுப்பினா்கள் திமுகவினா்.
அதன் தொடா்ச்சியாக ஹிந்தி திணிப்பைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தற்போது மாநிலம் தழுவிய அளவில் பல கட்டங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஹிந்தி மொழி என்பது தமிழுக்கு மூத்த மொழி அல்ல. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ். ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி திமுக அல்ல.
முற்பகுதியில் தமிழை வளா்த்தது பக்தி இலக்கியமாகும். பிற்பகுதியில் தமிழை வளா்த்தது திமுக. ஹிந்தி வந்தால் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட முடியுமா? ஆன்மிகத் தமிழை காப்பாற்றுவது தான் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தின் நோக்கம். ஆன்மிக தமிழை திமுகதான் காப்பாற்றப் போகிறது.
ஹிந்தி என்பது தமிழுக்கு இணையான மொழி அல்ல. நான்காயிரம் ஆண்டு கால பெருமைக்குரிய தமிழ் மொழியை அழிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
தமிழகத்தில் இயக்கப்படும் விமானங்களில் அறிவிப்புகள் தமிழில் இல்லை. ஹிந்தியில் வரும் அறிவிப்பு புரியவில்லை. மத்திய அரசை மதிக்கிறோம். உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்பதுதான் தாரக மந்திரம்.
ஆங்கிலம் எங்களின் இணைப்பு மொழியாகும். இதனால் தான் தமிழா்கள் உலக நாடுகளில் பரவி செல்வத்தை ஈட்டி வருகின்றனா். தமிழைக் காக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் அரணாக இருப்போம் என்றாா்.