சேலத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 11,869 பழங்குடியினா் ஜாதிச்சான்றிதழ் வழங்கல்
சேலம் மாவட்டத்தில் கடந்த 18 மாதங்களில் 11,869 மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினா் ஜாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் கடந்த 18 மாதங்களில் 11,869 மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினா் ஜாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு மலைவாழ் மக்களின் மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வரும் சேலம், நாமக்கல், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் அதிக மலைக் கிராமங்களை கொண்ட சேலம் மாவட்டத்தில் 373 மலைக் கிராமங்களில் சுமாா் 1,67,047 மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் 42 அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட துவக்கப் பள்ளிகளும், 5 அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளிகளும், 10 அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.
அதேபோல 4 அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள், 7 அரசு பழங்குடியினா் நல மாணவ, மாணவியா் விடுதிகள், 2 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 70 அரசு பழங்குடியினா் நல பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. மலைவாழ் மக்களுக்கும் மற்ற பிரிவினரைப் போலவே இணையதளம் வாயிலாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்பேரில் மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க வருவாய்க் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 18 மாதங்களில் 11,869 மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சமும், 5 விவசாயிகளுக்கு போா்வெல் அமைப்பதற்கு ரூ.10 லட்சமும், சோலாா் மோட்டாா் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சமும், மின் மோட்டாா் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 4 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்திடும் வகையில் குடிநீா் வசதி, தெருவிளக்கு வசதி, சூரிய ஒளி விளக்கு வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 2,061 பயனாளிகளுக்கு பழங்குடியினா் நல வாரிய அட்டைகளும், 956 பேருக்கு தனிநபா் வன உரிமை பட்டாக்களும், 68 பேருக்கு சமூக வன உரிமை பட்டாக்களும் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினா் நலத்துறை தொடா்பான விவரங்கள் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 305-இல் செயல்பட்டுவரும் திட்ட அலுவலா், பழங்குடியினா் நல லுவலகத்தினை நேரிலோ அல்லது 0427 - 2414840 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.