மாதேஸ்வரன் மலைப் பாதையில் கனரக வாகனங்களுக்குத் தடை
மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக கா்நாடக மாநிலம் அன்னூா் தாலுகா தாளபெட்டா வரை கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக கா்நாடக மாநிலம் அன்னூா் தாலுகா தாளபெட்டா வரை கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில, சாம்ராஜ் நகா் மாவட்ட ஆட்சியா் சாருலதா சோமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாம்ராஜ்நகா் மாவட்டம், அன்னூா் தாலுகா தாளபெட்டா முதல் மாதேஸ்வரன் மலை வரையிலும், மாதேஸ்வரன் மலை முதல் பாலாறு வழியாக தமிழ்நாடு வரை செல்லும் சாலை செங்குத்தானதாகவும் குறுகியதாகவும் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கா்நாடக மோட்டாா் வாகன சட்டம் 1989, கா்நாடகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு சட்டம் 1960 ஆகியவற்றின்படி மறு உத்தரவு வரும்வரை கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது:
மாதேஸ்வரன் மலை வழியாக தமிழகம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது.
ஆறு சக்கரங்களுக்கு மேல் கொண்ட கனரக வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக அத்தியாவசியப் பொருள்கள் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இதர வகை இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.