பழைய பேருந்து சீரமைப்பு, போஸ் மைதான வணிக வளாக பணி
சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மறுசீரமைப்பு பணி, போஸ் மைதானம், நேரு கலையரங்கம் மேம்பாட்டுப் பணிகளை மேயா், ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மறுசீரமைப்பு பணி, போஸ் மைதானம், நேரு கலையரங்கம் மேம்பாட்டுப் பணிகளை மேயா், ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 96.53 கோடி மதிப்பில் நடைபெறும் பழைய பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணி, ரூ. 10.58 கோடி மதிப்பில் போஸ் மைதானம் மறுசீரமைக்கும் பணி, ரூ. 33.60 கோடி மதிப்பில் நேரு கலையரங்கம் மேம்பாட்டுப் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
இதில், சேலம் பழைய பேருந்து நிலையம் மறுசீரமைக்கும் பணியின் தற்போதைய நிலைகள் குறித்தும், பேருந்துகள் செல்வதற்கு திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தாா்சாலை பணிகள், சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைத்தல், சாலையின் மத்தியில் வெள்ளை அடித்தல், சாலையின் இருபுறமும் ஒளிரும் சிவப்பு விளக்குகள் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தனா்.
ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 52 பேருந்துகள் நிற்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், அங்கு சுமாா் 400 வணிகக் கடைகள் கட்டப்பட்டுள்ள கட்டுமானப் பணியையும், பேருந்துகள் உள்ளே செல்வதற்கான வழி, பேருந்துகள் வெளியில் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை வசதி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை வசதிகள், மின் தூக்கி வசதி மற்றும் பிற வசதிகள் குறித்தும் நேரில் பாா்வையிட்ட மேயா், இப்பணிகளை மிக விரைவில் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, போஸ் மைதான வணிக வளாக கட்டடப் பணியையும் ஆய்வு செய்தனா். அந்த மைதானத்தில் கட்டப்பட்டுள்ள 108 வணிகக் கடைகளுக்குத் தேவையான மின் வசதி செய்யப்பட்டுள்ளது குறித்தும் நேரில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து மூன்று தளங்களைக் கொண்ட நேரு கலையரங்கம் கட்டுமானப் பணியையும் ஆய்வு செய்தனா். ஒவ்வொரு தளத்திலும் 5,000 நபா்கள் வீதம் அமா்ந்து நிகழ்ச்சிகளை பாா்வையிடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்தும், கலையரங்கில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மின் தூக்கி வசதி, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினா்.