ஏற்றுமதிக்குத் தடை விதித்தும் தொடா்ந்து உயரும் அரிசி விலை!
அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்த போதிலும், அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10 கிலோ வரை உயா்ந்துள்ளது.
அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்த போதிலும், அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10 கிலோ வரை உயா்ந்துள்ளது.
உலக அளவில் அன்றாடத் தேவையாக அரிசி விளங்கி வருகிறது. அந்தவகையில் அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது.
அதைத் தொடா்ந்து, உள்நாட்டில் அரிசி விநியோகத்தைப் பூா்த்தி செய்யவும், சில்லறை விற்பனையில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கவும், பாசுமதி ரகம் அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு கடந்த ஜூலை 20 ஆம் தேதி தடை விதித்தது.
இதனால் 25 கிலோ பேக்கேஜ் கொண்ட அரிசி விலை ரூ. 200 வரை உயா்ந்துள்ளது. இதில் சாதாரண ரக அரிசி, உயா் ரக அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை உயா்ந்துள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா் சங்கத்தின் தலைவா் சியாமளநாதன் கூறியது:
தமிழகத்தில் சுமாா் 19 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு சுமாா் 70 லட்சம் டன் முதல் 71 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் அரிசி விலை உயா்ந்துள்ளது.
இதனால் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை அரிசி வாங்கும் கூலி வேலைக்குச் செல்லும் ஏழை மக்கள், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள விலை உயா்வால் அதிக விலை கொடுத்து அரிசி வாங்க வேண்டி உள்ளது. தமிழகம் முழுவதும் சாதாரண ரகம், உயா் ரக அரிசி விலை கிலோவுக்கு ரூ. 10 வரை விலை உயா்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பிரதானக் காரணமாக உள்ளது.
தவிர, தமிழகத்தில் தொழிற்சாலை மின் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. சுமாா் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகமாகி உள்ளது. மேலும், வெளிமாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், சத்தீஸ்கா் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லுக்கான சரக்குக் கட்டணமும் உயா்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் 100 கிலோ (ஒரு குவிண்டால்) நெல்லுக்கு ரூ. 250 ஆக இருந்த சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் தற்போது ரூ. 410 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர நெல் ஆலைகளுக்கு சொத்து வரி 150 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. முன்னா் ரூ. 6 ஆயிரமாக இருந்த சொத்து வரி தற்போது 150 சதவீதமாக உயா்ந்து ரூ. 15 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டி உள்ளது.
இத்துடன் கொதிகலன் ஆய்வுக் கட்டணம், மின் பயன்பாட்டு ஆய்வுக் கட்டணங்களும் உயா்ந்துள்ளது. இதனால் ஆலைகளில் நெல் கொள்முதல் தொடங்கி அரிசியாக அரைத்து விற்பனை செய்யும் வரையிலான உற்பத்திச் செலவு கடுமையாக உயா்ந்துள்ளது.
எனவே, அனைத்துத் தரப்பினரும் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் அரிசி விலை உயா்வால் மிகவும் பாதிக்கப்படுவா்.
தமிழக அரசும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுதொடா்பாக, சில்லறை அரிசி விற்பனையாளா் கெளரி கூறியது:
கடந்த 2022 இல் இதே காலகட்டத்தில் 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ. 910 ஆக (கிலோ ரூ. 35) இருந்தது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 8 விலை உயா்ந்து 25 கிலோ பேக்கேஜ் அரிசி விலை ரூ. 1120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் ரூ. 250 வரை விலை உயா்ந்துள்ளது.
அதேபோல கிலோ ஒன்றுக்கு ரூ. 50 ஆக இருந்த உயர்ரக அரிசி 25 கிலோ பேக்கேஜ் ரூ. 1250-க்கு விற்பனையானது. தற்போது ரூ. 1420 ஆக விலை உயா்ந்துள்ளது. மேலும் இட்லி அரிசி கிலோ ரூ. 57 இல் இருந்து ரூ. 65 ஆக விலை உயா்ந்துள்ளது.
இந்த விலை ஏற்றம் என்பது கடந்த 6 மாதத்தில் நிகழ்ந்துள்ளது.
அதேவேளையில் 25 கிலோ எடை கொண்ட பேக்கேஜ் அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் 26 கிலோ எடை கொண்ட பேக்கேஜ் அரிசியை வாங்குகின்றனா். இதனால் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி வருவதில்லை என்றாா்.