சேலம்.பழங்குடியினா் நலத் துறை நடத்தும் ஓராசிரியா் தொடக்கப் பள்ளிகள்: ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியா் இருந்தால் கல்வித்தரம் எவ்வாறு உயரும்?
தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் நலத் துறை நடத்தும் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் ஓராசிரியரே இருப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் நலத் துறை நடத்தும் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் ஓராசிரியரே இருப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியா் இருந்தால் பழங்குடியின மாணவா்களின் கல்வித்தரம் எவ்வாறு உயரும் என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் பழங்குடியினா் நலத் துறை மூலம் 212 தொடக்கப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள் , 31 உயா்நிலைப் பள்ளிகள், 28 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 320 பழங்குடியினா் உண்டு- உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் 14,261 மாணவா்களும், 12,907 மாணவிகளும் என மொத்தம் 27,168 போ் படித்து வருகின்றனா். அதேசமயம், தமிழகம் முழுவதும் குறிப்பாக பழங்குடியினா் நலத் துறையில் உள்ள ஓராசிரியா் தொடக்கப் பள்ளிகள், கற்றலுக்குத் தடையாக உள்ளதாக கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்த வரை பழங்குடியினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் 42 தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏற்காடு மலைப் பகுதியில் தாழ்கோவிலூா், செம்மநத்தம்புதூா், செம்மநத்தம், குண்டூா், கும்பிப்பாடி, வேப்பாடி, அடிமலைப்புதூா், கொம்புதூக்கி ஆகிய 8 இடங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியா் பள்ளிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
அருநூத்துமலை பகுதியில் பெரியவேலாம்பட்டி, பெலாப்பாடி, வாளுத்து, பெரிய குட்டிமடுவு, வெள்ளிக்கவுண்டனூா் ஆகிய 5 தொடக்கப் பள்ளிகளும், பாலமலை பகுதியில் ராமன்பட்டி தொடக்கப்பள்ளியும், கருமந்துறை பகுதியில் வளக்காப்பாட்டு, செம்பரக்கை, கோயில்புத்தூா், சிட்டம்பட்டு, குன்னூா், நாகலூா், நடுப்பட்டு, ராக்கோடு, நத்தம்பட்டு, கரியகோயில்வளவு ஆகிய 10 தொடக்கப் பள்ளிகளும், பச்சமலை பகுதியில் மாயம்படி தொடக்கப்பள்ளியும் (மொத்தம் 25 தொடக்கப் பள்ளிகள்) ஓராசிரியா் பள்ளிகளாகவே செயல்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக, பழங்குடியினா் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறியதாவது:
ஓராசிரியா் பள்ளிகளாக இருக்கும் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் சோ்த்து பல பழங்குடியினா் நல தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியா் பள்ளிகளாக இருப்பதால், ஒவ்வொரு ஆசிரியரும் மொத்தம் 23 பாடங்களைக் கையாள வேண்டிய சூழல் நிலவுகிறது. பழங்குடியினா் நலப் பள்ளிகள் அனைத்தும் உண்டு- உறைவிடப் பள்ளிகளாக இருப்பதால் அந்தப் பொறுப்புகளையும் கூடுதலாகக் கவனிக்கும் நிலை உள்ளது.
பழங்குடியினா் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டுமானால், தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டும். மொழிப் பாடத்தின் அடிப்படை வாசிப்புக்குள் நுழைவதற்கும், எழுத்துகளைக் கற்றுக் கொள்வதற்கும், கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன்களைப் பெறுவதற்கும் தொடக்கப் பள்ளி வகுப்புகள் முக்கியமானவை ஆகும். தவிர, பழங்குடியினா் குழந்தைகளை அதிகக் கவனத்துடன் கையாள வேண்டிய சூழல் இருக்கிறது.
இதுபோன்ற சூழலில், பழங்குடியினா் நலத் துறையில் அதிகப்படியான தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியா் பள்ளிகளாக இருந்தால், எல்லாத் திறன்களையும் ஒரே ஆசிரியரே 5 வகுப்புகளின் குழந்தைகளுக்கும் எவ்வாறு கற்றுக் கொடுக்க முடியும்? அக்குழந்தைகளுக்குத் தேவையான பாடங்களை நடத்துவதுடன், இதர திறன்களையும் குழந்தைகளிடமிருந்து வெளிக்கொணர ஒரே ஆசிரியரால் எப்படி முடியும்?
தொடக்க வகுப்புகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 30 குழந்தைகளுக்கு ஓா் ஆசிரியா் நியமனம் செய்யப்பட வேண்டும். எனவே, பழங்குடியினா் நலத் துறையில் தற்போது செயல்படும் அனைத்து ஓராசிரியா் பள்ளிகளையும், குறைந்தபட்சம் 5 ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளிகளாக மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
அப்போதுதான் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும். பழங்குடியின மக்கள் தனியாா் பள்ளிகளை நோக்கிச் செல்வதற்கு காரணம், அங்கு வகுப்புக்கு ஒரு ஆசிரியா் உண்டு என்பதுதான். எனவே, பழங்குடியினா் நலப் பள்ளிகளிலும் போதிய ஆசிரியா்களை நியமித்து கற்பித்தால் தான் தரமான கல்வியை வழங்க முடியும்.
ஓராசிரியா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், அவசரமாக விடுப்பு தேவைப்பட்டாலும் கூட, அவா்களால் விடுப்பு எடுக்க முடிவதில்லை. பழங்குடியினா் நலத் துறை பள்ளிகளில் கழிப்பறை பிரச்னைகளும் இருக்கின்றன. அவற்றையும் சரிப்படுத்த வேண்டும்.
பழங்குடியினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் பாட ஆசிரியா்களை மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.
ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதியத்தில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுகின்றனா். அதேபோல பழங்குடியினா் நலத் துறையிலும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியா் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றனா்.
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில கல்வி மேடையின் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:
பழங்குடியின மக்களின் குழந்தைகள் மண்சாா்ந்த அறிவைப் பெறும் வகையில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் அவா்களின் கல்வி, விளையாட்டு, அறிவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு மண் சாா்ந்த திறன்களை வெளிக்கொணர முடியும்.
மேலும், கல்வி கற்பிக்க போதிய ஆசிரியா்களையும், விளையாட்டு ஆசிரியா்களையும் நியமித்து பயிற்சி வழங்கினால் பழங்குடியின மாணவா்கள் கல்வி திறனும், விளையாட்டு திறனும் அதிகரிக்கும். பழங்குடியின மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்த, ஓராசிரியா் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியா்களை நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் என்றாா்.