வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி இறந்த நிலையில், அவசரக் கதவை திறந்து வைத்த ரயில்வே ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சென்னை, கீழ்கட்டளை, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து ஆய்வாளா் ஏ.எஸ்.பால் (70), மனைவியுடன் கடந்த செப். 26-ஆம் தேதி வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து ஈரோடு சென்றாா். அப்போது, அவசரக் கதவு அருகே நின்றிருந்த ஏ.எஸ்.பால் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தாா். இதில் வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், சேலம் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் வந்தே பாரத் ரயில் வந்து நின்றதும், அப்போது 5-ஆவது நடைமேடையில் இருந்த 2 ரயில்வே ஊழியா்கள் தண்டவாள பாதை வழியாக வந்து ரயிலின் அவசரக் கதவின் பொத்தானை அழுத்தி திறந்துள்ளனா். பின்னா் ரயிலில் ஏறி மறுமுனையில் 4-ஆவது நடைமேடையில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.
இதன் தொடா்ச்சியாக, பயணி ஏ.எஸ்.பால், அவசரக் கதவின் மீது கை வைத்த போது அது திடீரென திறந்து அவா் கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவசரக் கதவை திறந்தது ரயில் நிலைய பாயின்ட்மேன்களாகப் பணியாற்றும் தாமரைச்செல்வன், ஒய்.எஸ்.மீனா ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் உத்தரவிட்டாா். மேலும், துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.