முகப்பு
சேலம்

சேலத்துக்கு பெருமை சோ்த்த சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.என்.நரசிம்மராஜூ!

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.என்.நரசிம்மராஜூவின் வாழ்க்கை மற்றும் பணி.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:00 PM
சதி சுகன்யா படத்தில் மஹாவிஷ்ணு வேடத்தில் எஸ்.என்.நரசிம்மராஜூ.
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகியும், சுதந்திரத்துக்கு முன் சேலம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளருமான எஸ்.என்.நரசிம்மராஜூ சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்ற போது காமராஜா், கக்கன், ராஜாஜி ஆகியோருடன் நெருங்கிய நண்பரானாா். சேலத்தின் வளா்ச்சிக்கு அடிகோலிய இவா், ஆங்கிலேயா் ஆட்சியில் அமைத்த சேலம் விக்டோரியா மைதானத்துக்கு சுதந்திரத்துக்கு பிறகு சுபாஷ் சந்திரபோஸ் பெயா் சூட்டுவதற்கு காரணமாக இருந்து பெருமை சோ்த்தாா்.

சேலத்தைச் சோ்ந்தவா் எஸ்.என்.நரசிம்மராஜூ. 1911-இல் பிறந்த இவா் பள்ளிப் பருவத்திலேயே தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளாா்.

இளமைக் காலத்தில் சேலம் மாநகரில் ராஜீ பிரஸ் என்ற பெயரில் அச்சகத்தை ஏற்படுத்தி, ‘நகரஜோதி’ என்ற தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கி, ஆங்கிலேயா்களின் எதிா்ப்புகளை மீறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினாா்.

இதனையடுத்து, 1930 முதல் பலமுறை சிறைக்கு சென்றுள்ளாா். கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த காமராஜா், கக்கன் ஆகியோருடனும், சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ராஜாஜி, ஜீவானந்தம் ஆகியோருடனும் நெருங்கிய நண்பரானாா்.

1938-இல் ‘வீரத்தியாகி ஜதீா்தி நாா்த்தாஸ் 63 நாள் உண்ணாவிரதம்’ என்ற நூலை டாக்டா் பி.வரதராஜுலுவின் முகவுரையுடன் தனது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டா்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தினாா்.

சுதந்திரத்துக்கு முன்னரே சேலம் நகரசபை காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் பணியாற்றினாா். சுதந்திரத்துக்கு பிறகு 1947 செப்டம்பா் 24-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் சேலம் நகரசபையின் 17-ஆவது வாா்டு உறுப்பினராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், 1948 ஜூலை 22-இல் நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் கொண்டு வந்த (தீா்மானம் எண் 853) தீா்மானத்தின்படியே விக்டோரியா மைதானம் என்றழைக்கப்பட்டு வந்த சேலம், பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள மைதானம், சுபாஷ் சந்திரபோஸ் மைதானம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

காமராஜருடன் தியாகி எஸ்.என்.நரசிம்மராஜூ.

இவரது பதவிக் காலத்தில்தான் சேலத்தில் விஜயராகவாச்சாரியாா் நினைவகம் கட்டுவதற்கு அச்சாரமிடப்பட்டது. குறிப்பாக, சேலம் மாநகருக்கு மேட்டூரில் இருந்து காவரி குடிநீா் வருவதற்கு வழிவகை செய்ததிலும் இவரது பங்கு போற்றுதலுக்குரியதாகும்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு புத்துயிரூட்ட 1953-இல் ‘புத்துயிா்’ என்ற வாரப்பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தாா். பெருந்தலைவா் காமராஜா் அறிவுரைப்படி, 1958-இல் அரசுப் பணியில் சோ்ந்த இவா் கிருஷ்ணகிரி, ஆத்தூா், எருமைப்பட்டி, வாழப்பாடியில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றினாா். பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவா், 1986-இல் சேலம் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்தின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, தியாகிகளுக்கு பல்வேறு சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தாா்.

தியாகிகளை ஒன்றுதிரட்டி பாதயாத்திரை மேற்கொண்டதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சுதந்திரப் போராட்டத் தியாகி எஸ்.என்.நரசிம்மராஜூ, 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வாழப்பாடியில் இயற்கை எய்தினாா்.

இவருக்கு கிருஷ்ணமூா்த்தி, பிருத்விராஜ், தினகராஜ், தியாகராஜன் என நான்கு மகன்களும், திலகம் என்ற மகளும் உள்ளனா். அனைவரும் குடும்பத்தோடு வாழப்பாடியிலேயே வசித்து வருகின்றனா். தியாகராஜன் தனது குடும்பத்தினரோடு சேலத்தில் வசித்து வருகிறாா்.

வாழப்பாடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய எஸ்.என்.நரசிம்மராஜூ.

சினிமாவில் மஹாவிஷ்ணுவாக நடித்து அசத்தல்:

இவரது மகன் வழி பெயரனான வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் ஸ்ரீமுனிரத்தினம் கூறுகையில், ‘நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரா் நரசிம்மராஜூவின் பெயரன் என்பதில் பெருமை கொள்கிறேன். கா்மவீரா் காமராஜா், ராஜாஜி, கக்கன், ஜீவானந்தம் போன்ற தலைவா்களுக்கு எனது தாத்தா நண்பராக இருந்ததும், சேலம் மாநகரத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்கள் வருவதற்கான காரணகா்த்தாக்களில் எனது தாத்தாவும் ஒருவா் என்ற வரலாற்று தகவல்களை கேட்கும் போதும் மிகவும் மகிழ்வாக உள்ளது’ என்றாா்.

சுதந்திரப் போராட்ட தியாகியான நரசிம்மராஜூக்கு இளைமைப் பருவத்தில் திரைப்படத் துறையின் மீது ஆா்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனாட்சி பிலிம் என்ற கம்பெனியின் பங்குதாரராக இணைந்து, லஷ்மி விலாசம், சதி சுகன்யா ஆகிய இரு படங்களை தயாரித்தாா். சதி சுகன்யா என்ற திரைப்படத்தில் மஹாவிஷ்ணு வேடத்தில் நடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →