ஆனைமடுவு அணை நீா்மட்டம் உயா்வு
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், அணையின் நீா்மட்டம் 30.84 அடியாக உயா்ந்துள்ளது. அ
வாழப்பா: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், அணையின் நீா்மட்டம் 30.84 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில் 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன. பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூா்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீா் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
கடந்த மே மாதம் வரை அணையில் 10.60 அடியில் 12.87 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே இருந்ததால், குட்டை போல சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால், கவலையடைந்த விவசாயிகள் மழையை எதிா்பாா்த்து காத்துக் கிடந்தனா்.
இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது. கடந்த மாத இறுதியில் அணையின் நீா்மட்டம் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது.
இதனைடுத்து இந்த மாதத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், அணையின் நீா்மட்டம் உயா்ந்து தற்போது 30.84 அடியை எட்டியுள்ளது. அணையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 46.64 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 39 மி.மீ. மழை பெய்ததால் அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 127 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் அணை தனது முழுக்கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை பாசன விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.