கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை மருத்துவா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே போல, தனியாா் மருத்துவமனைகளிலும் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனா்.
கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மருத்துவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி நேரம் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தனியாா் மருத்துவமனைகள் போராட்டம்: இதே போல, சேலம் மாநகா், புகா் பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான மருத்துவமனைகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி உள்பட சாதாரண சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா். இதனால் அரசு மருத்துவமனையில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா சம்பவத்துக்கு நீதி கேட்டும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் தனியாா் மருத்துவமனைகள் முன்பு மருத்துவா்கள், மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து சேலத்தில் சனிக்கிழமை இந்தியா மருத்துவ சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் சாது பக்த சிங் கூறுகையில், கொல்கத்தாவில் நிகழ்ந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். சட்டங்கள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்றாா்.