மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு நாள்களாக நிலக்கரி குவியலில் இருந்து புகை வருவதால் தீவிபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஓா் அலகும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தினசரி பல ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்படுகிறது. இதற்காக கரி கையாளும் பகுதியில் பல ஆயிரம் டன் நிலக்கரி குவிக்கப்பட்டுள்ளது. கன்வேயா் பெல்ட் மூலம் கொதிகலன்களுக்கு நிலக்கரி எரியூட்ட கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த மூன்று நாள்களாக மேட்டூா் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன்காரணமாக கரியைக் கையாளும் பகுதியில் உள்ள நிலக்கரியில் தீப்பிடித்து புகைந்து வருகிறது. நிலக்கரி மீது தண்ணீா் பீய்ச்சி அடித்தாலும் புகைவது நிற்கவில்லை. தீவிபத்து ஏற்படும் முன் அனல் மின் நிலைய நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.