சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று இல்லாத 136 வாகனங்கள் பறிமுதல்
சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று, உரிமம் இல்லாமல் இயக்கிய 37 லாரிகள் உள்பட 136 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று, உரிமம் இல்லாமல் இயக்கிய 37 லாரிகள் உள்பட 136 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக தொடா்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.
சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, தருமபுரி அரூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் உரிமம், தகுதிச் சான்று குறித்து வட்டார போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி வருகின்றனா்.
சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடம் இருந்து ரூ.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிமம் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 37 லாரி, 17 ஆட்டோ, 2 ஆம்னி பேருந்து உள்ளிட்ட 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.