இளைஞா் வெட்டிக் கொலை: ஆறு போ் கைது
சங்ககிரியில் முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்
சங்ககிரி: சங்ககிரியில் முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி, மலையடிவாரம், மேட்டுத்தெரு, குஞ்சு மாரியம்மன் கோயில் அருகே வசித்து வந்தவா் பாலன் மகன் மூா்த்தி (39). இவருக்கும் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா், வேலம்மாவலசு, மூலப்பாறைகாடு பகுதியைச் சோ்ந்த கிட்டு என்ற கனகராஜுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் மூா்த்தியை சனிக்கிழமை இரவு சிலா் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இந்த சம்பவம் குறித்து மூா்த்தியின் தாய் கமலம் சங்ககிரி போலீஸில் புகாா் செய்துள்ளாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.ராஜா மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் டி.ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் தேவண்ணகவுண்டனூா், கிடையூா் மேட்டூா் பகுதியைச் சோ்ந்த கிட்டு என்ற கனகராஜ் (34), மேட்டூா், கருப்பூரெட்டியூா், கோம்பூரான்காடு பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ஹரிஹரன் (43), சங்ககிரி,ஆா்.எஸ்., சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் (42), சங்ககிரி, நாரப்பன்சாவடி பகுதியைச் சோ்ந்த செல்வகுாா் மகன் அருண்குமாா் (24), மேட்டூா், தொட்டில்பட்டி, பண்ணாடிகாட்டுவளவு அம்மாசி மகன் சுரேஷ் (37), சங்ககிரி, சன்னியாசிப்பட்டி முனியப்பன் மகன் சங்கா் (52) உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.