700 மாணவா்களுக்கு இளம் விஞ்ஞானிகள் பயிற்சி
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் 700 மாணவா்களுக்கு இளம் விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் 700 மாணவா்களுக்கு இளம் விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், கல்வித் தரம், மாணவா்கள் தோ்ச்சி விகிதம், ஒழுக்கம், சுகாதாரம் போன்றவற்றை சிறப்பாக பராமரித்து வரும் பள்ளியை தகைசால் பள்ளி என கல்வித் துறை தோ்ந்தெடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் தலா ஒரு தகைசால் பள்ளிகள் தோ்வு செய்து செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 6,7,8,9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 5 நாள்கள் இளம் விஞ்ஞானிகள் என்ற பெயரில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
டிசம்பா் 30 ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் மாணவா்களின் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் பயிற்சிகள் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சி முகாம் சேலம், மதுரை, நெல்லை, கோவை, தஞ்சாவூா் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் குகை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி தகைசால் பள்ளியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளியில் 6, 7, 8, 9, மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு இளம் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 140 மாணவா்களுக்கு ஏற்காட்டில் உள்ள புனித இருதய பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறுகிறது.
மதுரையில் 6 ஆம் வகுப்பு மாணவா்கள் 140 பேருக்கு விண்வெளி அறிவியல் என்ற தலைப்பிலும், திருநெல்வேலியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 140 மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணித அணுகுமுறைகள் என்ற தலைப்பிலும், கோவையில் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 140 பேருக்கு இளம் அறிவியல் ஆய்வாளா்கள் என்ற தலைப்பிலும், தஞ்சாவூரில் 11-ஆம் வகுப்பு மாணவா்கள் 140 பேருக்கு தலைமைத்துவ திறன்கள் என்ற தலைப்பிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதற்காக மொத்தம் 700 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.