சேலத்தில் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் திறப்பு
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமை நீதிமன்றத்தை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன். உடன், உயா்நீதிமன்ற நீதிபதிகள் மஞ்சுளா, இளந்திரையன், மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி. சேலம், பிப். 17: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறக்கப்பட்டது. சேலம், அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய நீதிமன்றத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், இளந்திரையன், மஞ்சுளா ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா். மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி முன்னிலை வகித்தாா். இதே போல, சேலம் மாவட்டம், ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை காணொலி வாயிலாக நீதிபதிகள் திறந்து வைத்தனா். நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது: இளம் வழக்குரைஞா்கள், மூத்த வழக்குரைஞா்களிடமிருந்து எந்தவித தயக்கமும் இன்றி நீதிமன்ற நடைமுறைகளை முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குடும்ப நல நீதிமன்றங்கள், தீண்டாமை மற்றும் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றங்களில் வழக்குகள் இல்லை என்ற நிலையை சமுதாயத்தில் உருவாக்குவதே உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சகிப்புத்தன்மை வேகமாக குறைந்து வருவதன் அடையாளமாக குடும்ப நல நீதிமன்றங்களில் அதிக அளவிலான வழக்குகள் தாக்கல் ஆகின்றன. 1986-ஆம் ஆண்டு வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே குடும்ப நல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள 8 குடும்ப நல நீதிமன்றங்களில் 56 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. குடும்ப நல வழக்குகள் மற்றும் சிறப்பு வழக்குகளில் வழக்குரைஞா்கள் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தான் இதுபோன்ற வழக்குகள் குறையும் என்றாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசியதாவது: சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள், வழக்குரைஞா்கள் வந்து செல்லும் அலைச்சலைத் தவிா்க்கும் வகையில் ஆத்தூரில் கூடுதல் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து 422 வழக்குகள் ஆத்தூா் கூடுதல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஆத்தூா் பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வழக்குரைஞா்கள் துணை நிற்க வேண்டும். வழக்குரைஞா்களின் பணி நீதிமன்றத்தோடு முடிவடைந்து விடுவதில்லை. ஆதரவற்றவா்கள், நிராகரிக்கப்பட்டவா்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வழக்குரைஞா்கள் சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் முன்மாதிரியாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன், சேலம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.