முகப்பு
சேலம்

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய விவகாரம்: சேலத்தில் 8 பேர் கைது

வலி நிவாரண மாத்திரைகள் போதையில்: சேலத்தில் 8 பேர் கைது

Updated On : 2 ஜூலை, 2024 at 9:13 PM
பகிர்:

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய விவகாரத்தில் 8 போ் கைதான நிலையில், சேலம், அரியானூா், நான்கு சாலை பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம், நான்கு சாலை, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞா்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில், மருந்துக் கடை ஊழியா்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் கூட்டாக சோ்ந்து இளைஞா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக, சேலம், சாமிநாதபுரத்தைச் சோ்ந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி சுப்பிரமணி (55), சின்ன திருப்பதியைச் சோ்ந்த மருந்து மொத்த விற்பனை டீலரான ரமேஷ் (63), கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த சரண் (40), அரியானூா் பகுதியில் உள்ள மருந்துக் கடையில் பணியாற்றிய மல்லூா் நிா்மல்ராஜ் (33) உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நிா்மல்ராஜ் வேலை செய்த அரியானூரில் உள்ள மருந்துக் கடையில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். மேலும், சுப்பிரமணி மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய சேலம் நான்கு சாலையில் உள்ள மருந்துக் கடையிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த 2 கடைகளிலும் உரிய ஆவணங்கள் இன்றி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →