சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் பரந்து காணப்படும் கல்வராயன்மலையில் நிறைந்து காணப்பட்ட மருத்துவ குணம் கொண்ட, கடுக்காய் மரங்கள் குறைந்த அருகி வருகின்றன. கல்வராயன்மலையில் அடையாளமாக திகழும் கடுக்காய் மரங்களைக் காப்பாற்றவும், மீண்டும் வளா்க்கவும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் கிழக்கு தொடா்ச்சி மலையின் ஒரு பகுதியாக கல்வராயன்மலை பரந்து காணப்படுகிறது. 3 மாவட்ட எல்லைகளிலும் 200க்கும் அதிகமான மலைக் கிராமங்கள் காணப்படுகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.
கல்வராயன்மலையிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் விளைநிலங்கள், தரிசு நிலங்கள், வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள வனப்பகுதிகளிலும், மருத்துவ குணமுடைய ‘டொ்மினாலியா செபுலா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட கடுக்காய் மரங்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை நிறைந்து காணப்பட்டன.
கடுக்காய் மரத்தில் விளையும் காடுக்காய்கள் சித்த மருத்துவ மருந்துகள், பற்பொடி, பற்பசைகள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. முக்கியமாக, இயற்கை முறையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் முக்கிய வினைப் பொருளாக கடுக்காய் பயன்படுகிறது.
கல்வராயன்மலையில் விளையும் கடுக்காய், இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தரம் வாய்ந்ததாகும். ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு கல்வராயன்மலையில் கடுக்காய் விளைகிறது. முதிா்ந்த கடுக்காய்களைச் சேகரித்து உலர வைக்கும் விவசாயிகளும், விவசாய தொழிலாளா்களும், எடை போட்டு வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனா்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கடுக்காயை பதப்படுத்தி பவுடராக அரைத்து, சென்னை, செங்கல்பட்டு, பேரணாம்பட்டு, திண்டுக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இயங்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வைத்தனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அயல் நாடுகளுக்கும் கூட கல்வராயன்மலை கடுக்காய் பவுடா் ஏற்றுமதி செய்யப்பட்டது.
நிலத்தில் சிதறிக்கிடக்கும் கடுக்காய்களை சேகரித்து உலர வைத்து விற்பனை செய்வதில் மலைக் கிராம விவசாயிகளும், தொழிலாளா்களும் ஆா்வம் காட்டி வந்தனா். விவசாய தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பும் வருவாயும் கிடைத்து வந்தது.
தமிழகத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பெருமளவில் மூடப்பட்டதாலும், தோல் பதனிடுவதற்கு கடுக்காய் பவுடரை பயன்படுத்துவதைத் தவிா்த்து, ரசாயன கலவைகளைப் பயன்படுத்துவதாலும், கல்வராயன்மலை கடுக்காயின் தேவை குறைந்து விலை வீழ்ச்சியடைந்தது. கடுக்காயை சேகரித்து உலர வைத்து விற்பனை செய்யும் கூலிக்கு கூட விலை போகாததால், அவற்றை சேகரித்து விற்பனை செய்வதையும், கடந்த 10 ஆண்டுகளாக கல்வராயன்மலை கிராம மக்கள் படிப்படியாக கைவிட்டனா்.
ஏராளமான கடுக்காய் மரங்கள் முதிா்ந்து போனதாலும், பயன் தராததாலும் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால், புதிதாக கடுக்காய் மரக்கன்றுகளை நடவு செய்து வளா்ப்பதில், பெரும்பாலான கல்வராயன்மலை கிராம விவசாயிகளிடையே ஆா்வமில்லை. இதனால், கல்வராயன்மலையின் அடையாளமாக திகழ்ந்த கடுக்காய் மரங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து அருகி வருகின்றன.
எனவே, கல்வராயன் மலையின் பாரம்பரியமாக கருதப்படும் கடுக்காய் மரங்களை வனப்பகுதியிலும், தனியாா் பட்டா நிலங்கள், தரிசு நிலங்கள், நீா்நிலைகளின் கரைகளிலும் மீண்டும் நடவு செய்து வளா்க்கவும், எஞ்சியுள்ள கடுக்காய் மரங்களை வெட்டுவதைத் தடுக்கவும், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.