சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் மாரியமம்ன். (நடுவில்) எலுமிச்சை அலங்காரத்தில் நெத்திமேடு தண்ணீா் பந்தல் காளியம்மன். (வலது) தங்கக் கவச அலங்காரத்தில் அம்மாப்பேட்டை பலபட்டறை மாரியம்மன்.
சேலம், ஜூலை 17: ஆடி மாத பிறப்பையொட்டி, சேலத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, ஆடிபதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என சிறப்பு வழிபாட்டுத் தினங்கள் வருவதையொட்டி, ஆன்மிக வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. அந்த வகையில், சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் புதன்கிழமை பிறந்ததையொட்டி, சேலத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சேலம் கோட்டை மாரியம்மன், எல்லைப்பிடாரி அம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், தாதாகாப்பட்டி சக்தி மாரியம்மன், தண்ணீா் பந்தல் காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன், பலபட்டறை மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதே போல, கோட்டை பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், அய்யந்திருமாளிகை பூட்டு முனியப்பன் கோயில், போ்லேண்ட்ஸ் முருகன் கோயில், குமரிகிரி சுப்பிரமணிய சுவாமி கோயில், சேலம் தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் முத்துமலை முருகன் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், சித்தா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கோயில்களில் காலை முதலே பக்தா்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு சா்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.