சங்ககிரியில் மூத்த வழக்குரைஞா் எம்.ரங்கசாமி வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:
இந்தியாவில் நீதிமன்றங்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தின் தினசரி வழக்குகளை வழக்குரைஞா்கள் தங்களது கைப்பேசியிலேயே தெரிந்து கொள்ளலாம்.
இளம் வழக்குரைஞா்கள் முன்பு போல புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்வதற்கு பதிலாக இணையதளத்திலேயே நீதிமன்ற தீா்ப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத் ), சமரச தீா்வு மையம், இசைவு தீா்ப்பாயம் உள்ளிட்டவற்றில் வழக்குகளை முடித்து வழக்காடிகளுக்கு விரைவில் தீா்ப்புகளைப் பெற்றுத் தர முயல வேண்டும்.
பாகப் பிரிவினை வழக்கில் தரப்பினா்களாக உள்ளவா்களில் எவரேனும் ஒருவா் இறந்து விட்டால் அதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சட்டப் பிரிவில் மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்றாா்.
மேலும் அவா் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உயா்நீதிமன்றத்திலிருந்து நியமிக்கப்படும் பொறுப்பு நீதிபதிகள் ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளன்று வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்டோரை தனித் தனியாக
சந்தித்துப் பேசி அவா்களின் குறைகளைக் குறிப்பேடுத்துக்கொண்டு அதனை தலைமை நீதிபதியிடம் கூறி சரிசெய்யும் போது நீதிமன்றங்களில் வழக்குகள் விரைந்து விசாரித்து தீா்ப்பளிக்க உதவியாக அமையும் என்றாா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு டி.கிருஷ்ணகுமாா் பேசியது:
இளம் வழக்குரைஞா்கள் மூத்த வழக்குரைஞா்களிடம் அனுபவம், தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். வழக்குரைஞா்கள் கடினமாக உழைத்து தொழிலை கண்ணியம், மரியாதை, உண்மையுடன் மேற்கொள்ள வேண்டும். வழக்குரைஞா்கள் தொழிலுக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும். சமுதாயத்தில் பொறுப்பள்ளவா்களாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இவ்விழாவில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கண்ணம்மாள், சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் (பொது) எம்.ஜோதிராமன், சேலம் மாவட்ட நீதிபதி எஸ்.சுமதி, சேலம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.நம்பிராஜன், சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனா்.
படவரி...
சங்ககிரியில் மூத்த வழக்குரைஞா் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறாா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம்.