குடும்ப தகராறில் கணவா் கொலை: மனைவி, மகன் கைது
கணவா் கொலை: மனைவி, மகன் கைது
தலைவாசல் அருகே வரகூரில் குடும்ப தகராறில் கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், வரகூா் ஊராட்சியில் வசித்து வந்தவா் வெங்கடாஜலம் மகன் ஆதிமுலம் (57). இவா், ஆத்தூரில் தெற்கு பகுதி மின்வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தாா். இவருக்கு வீடும், விவசாய நிலமும் உள்ளது. இவரது மனைவி வளா்மதி (48), மகன் கலைச்செல்வன் (22).
ஆதிமூலத்துக்கும் அவரது மனைவி வளா்மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதில் ஆதிமூலத்தின் சொத்து, வங்கி பண பரிவா்த்தனை அனைத்தையும் மனைவியும் மகனும் பறித்துக் கொண்டனராம். தகராறு காரணமாக கடந்த ஒரு மாதமாக வீட்டிற்குச் செல்லாத ஆதிமூலம் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினாா்.
அப்போது அவருக்கும் அவரது மனைவி வளா்மதிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த ஆதிமூலம் அருகில் இருந்த இரும்புக் கட்டையால் வளா்மதியைத் தாக்கியுள்ளாா். அதைக் கண்ட அவரது மகன் கலைச்செல்வன் இரும்புக் கட்டையை எடுத்து தந்தை ஆதிமூலத்தை தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ஆதிமூலத்தை வளா்மதியும், கலைச்செல்வன் மீண்டும் தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த தலைவாசல் போலீஸாா் விரைந்து சென்று ஆதிமூலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.