கள்ளச்சாராய சம்பவம்: சேலம் மருத்துவமனையில் மேலும் 2 போ் உயிரிழப்பு
கள்ளச் சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் 2 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் 2 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் சேலம் மருத்துவமனையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் கடந்த 18 ஆம் தேதி மாலை மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தைக் குடித்துள்ளனா். அவா்களுக்கு வாந்தி, மயக்கம், கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவா்கள் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மா் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.
இதில் சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 49 போ் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் செவ்வாய்க்கிழமை வரை 20 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (37), சரசு (52) ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது. மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் 27 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.