சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியா்கள் 5ஆவது நாளாக போராட்டம்: உண்ணாவிரதம் இருக்க முயன்ற 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது
சம வேலைக்கு சம ஊதிய அரசாணையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் இடைநிலை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். உண்ணாவிரதத்துக்கு முயன்ற 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். சேலம், கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் 5ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கூறுகையில், ‘ஒரே பணி-ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும், இரண்டு விதமான ஊதிய முரண்பாட்டை களையக்கோரி, கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதைத் தொடா்ந்து, மூன்று நபா் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துகளைக் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, திமுக அரசின் தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 5ஆவது நாளாக போராட்டம் நடத்துகிறோம்’ என்று இடைநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா். அப்போது, கோட்டை மெயின் சாலையில் சாலையோரம் அமா்ந்து உண்ணாவிரதம் இருக்க அவா்கள் முயற்சி செய்தனா். அதற்கு அனுமதி மறுத்த போலீஸாா், பெண் ஆசிரியா்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.