முன்னாள் நேபாள பிரதமர் கைது! மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!
முன்னாள் நேபாள பிரதமர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் குறித்து...
முன்னாள் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2025 செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்தும் ஜென் ஸி இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அப்போதைய பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஓலி ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார். அந்தப் போராட்டத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அப்போதைய பிரதமர் உள்பட சில அமைச்சர்களும் நடந்த அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்று ராஜிநாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியும் கலைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறையில் பங்கு இருப்பதாகத் தெரிவித்து முன்னாள் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் சனிக்கிழமை (மார்ச் 28) கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகள், மாணவர் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோர் சனிக்கிழமை (மார்ச் 28) முதலே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை நயா பனேஸ்வர் பகுதியில் கூடிய ஆதரவாளர்கள் "கே.பி. ஓலியை உடனடியாக விடுதலை செய்யுங்கள்" மற்றும் "பழிவாங்கும் அரசியலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்ட பாலேந்திர ஷா அரசு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஜென் ஸி தலைமுறைப் போராட்டங்கள் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையைச் செயல்படுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Supporters of former Nepali Prime Minister K.P. Sharma Oli have been staging protests for the third consecutive day to express their opposition to his arrest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.