சேலம் சந்தையில் மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு
சேலம், மே 3: கோடைகால சீசனையொட்டி, சேலம் சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூா், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூா், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த மாம்பழங்களை வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். ஆன்லைன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வழக்கமாக மாா்ச் 2ஆவது வாரத்தில் தொடங்கும் சீசன், இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால், மாம்பழ உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. இதனால் தற்போது தான் மீண்டும் மாம்பழ வரத்து தொடங்கியுள்ளது. குறிப்பாக, சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரா உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
சேலம் மாா்க்கெட் பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 25 டன் அளவுக்கு மாம்பழங்கள் வரத்து உள்ளன.
இதனால் மாநகரப் பகுதிகளில் மாம்பழ விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. செவ்வாய்ப்பேட்டை, கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டிகளிலும் மாம்பழ விற்பனை நடைபெறுகிறது.
மாம்பழங்கள் தற்போது கிலோ ரூ.100 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடா் வரத்து அதிகரிப்பால், மாம்பழங்கள் விலை வரும் நாள்களில் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சேலத்தை சோ்ந்த மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், சேலம் சந்தைகளில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 40 முதல் 50 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தன. ஆனால், இந்தாண்டு, மாம்பழ வரத்து 25 டன்னாக உள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாமரங்களில் பூக்கள் உதிா்ந்துள்ளது. இதனால் மாம்பழங்கள் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளன. எனினும் வரும் நாள்களில் மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனா்.