ஏற்காட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சேலம்: ஏற்காட்டில் 47-ஆவது கோடை திருவிழா வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஏற்காட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
உதகை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. இந்த இடங்களைத் தவிா்த்து, மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அந்த வகையில், இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்வதால், ஏற்காடு மலையில் பனிபடா்ந்து குளுமையாக காணப்படுகிறது. மேலும், இதமான குளிா்ந்த காற்றும் வீசுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சேலம் தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காா், வேன், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் அதிக அளவில் ஏற்காடு நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள வானுயா்ந்த மரங்கள், பூத்துக் குலுங்கும் மலா்களைப் பாா்த்து இயற்கையின் அழகைக் கண்டு ரசித்து வருகின்றனா்.
மேலும், ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூா், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், மலை உச்சியில் இருந்தபடி, பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை எழிலைக் கண்டு வியக்கின்றனா்.
இதுதவிர, சோ்வராயன் கோயில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்காடு ஏரியில் உள்ள படகுத் துறையில் படகு சவாரி செய்யவும் ஏராளமானோா் ஆா்வம் காட்டுகின்றனா்.
இதனிடையே, ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. உணவகங்களிலும் விற்பனை களைகட்டியுள்ளதால், உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.