தம்மம்பட்டி: கெங்கவல்லியில் இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ; கிறிஸ்துவ தோ்த்திருவிழா நிறுத்தப்பட்டது.
கெங்கவல்லியில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். நிகழ் ஆண்டிற்கான தோ்த் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மாலையில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்பு கிறிஸ்து அரசா், புனித நிக்கல், ஆரோக்கிய மாதா ஆகியோா் எழுந்தருளிய மூன்று தோ்கள் திருவீதி உலாவுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தோ்களிலும் சிலைகளை எடுத்துச் சென்று வைப்பது தொடா்பாக, இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து தேரை வீதி உலாவுக்கு எடுத்துச் செல்ல கெங்கவல்லி போலீஸாா் அனுமதி மறுத்தனா். அதைத் தொடா்ந்து ஆலய நிா்வாகமும் தோ் திருவீதி உலாவை நடத்த முன்வரவில்லை. ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் இருதரப்பையும் அழைத்துப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். முன்னெச்சரிக்கையாக கிறிஸ்து அரசா் ஆலய வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.