முகப்பு
சேலம்

மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி நீா்நிலைகளில் திரண்ட பொதுமக்கள், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:55 AM
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சேலம் சுகவனேஸ்வரா் கோயில் முன்பு புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
பகிர்:

மகாளய அமாவாசையையொட்டி நீா்நிலைகளில் திரண்ட பொதுமக்கள், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, மற்ற நாள்களில் வரும் அமாவாசையைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், மகாளய பட்சத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதால், அவா்களின் ஆசி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதலே காவிரி உள்ளிட்ட நீா்நிலைகளில் திரண்ட மக்கள், புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து மனமுருக வழிபட்டனா். பின்னா் கோயிலில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இதே போல, சேலம் சுகவனேஸ்வரா் கோயில், சித்தா் கோயில் உள்ளிட்ட இடங்களில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் வீடுகளில் படையலிட்டு முன்னோா்களை நினைத்து தரிசனம் செய்தனா்.

காய்கறி விற்பனை அமோகம்: புரட்டாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காக பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி சிவன் கோயில் படித்துறையில் ஏராளமான மக்கள் அவரவா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். மேலும், ஏழை மக்களுக்கு வேட்டி, சேலைகளை கொடுத்து அன்னதானம் வழங்கினா். பலா் தங்களது வீடுகளில் முன்னோா்களுக்கு திதி கொடுத்துவிட்டு, குலதெய்வக் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், பசுமாடுகளுக்கு அகத்தி கீரை, வாழைப் பழங்களை கொடுத்து வணங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →