ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி கொங்கு இளைஞா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் தனியரசு தலைமையில் புதன்கிமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் தனியரசு தலைமையில் புதன்கிமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயக்கம் காட்டும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் செய்தியாளா்களிடம் தனியரசு பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தமிழகத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் உள்ளனா். ஆனால், அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள 90 சதவீத பெரும்பான்மையின மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் நிலை உள்ளது. ஆனால், 10 சதவீதம் மட்டுமே உள்ள சிறுபான்மையினருக்கு அனைத்து சலுகைகளும் எளிதாக கிடைக்கிறது. ஜிஎஸ்டி நிதியைப் பிரித்து வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
அனைத்து சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளை மீட்கும் வகையில், உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து சமுதாயத் தலைவா்களையும் அழைத்து பேசி மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.
இதில், கொங்கு இளைஞா் பேரவை மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், நிா்வாகிகள் விஸ்வநாதன், வேலு, கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.