முகப்பு
சேலம்

சேலம், தருமபுரியில் விதிகளை மீறி இயக்கிய 158 வாகனங்கள் பறிமுதல்

சேலம், தருமபுரி சரகத்தில் விதிகளை மீறி இயக்கிய 158 வாகனங்களைப் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:36 PM
பகிர்:

சேலம், தருமபுரி சரகத்தில் விதிகளை மீறி இயக்கிய 158 வாகனங்களைப் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களும் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக தொடா்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனா்.

அதன்படி, சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, தருமபுரி அரூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வாகனங்களுக்கும் முறையான அனுமதி உள்ளதா, விதிமுறைக்கு உள்பட்டு இயக்கப்படுகிா என அவ்வப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி வருகின்றனா்.

கடந்த மாதத்தில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும், விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி இயக்கிய 1,571 வாகனங்களுக்கு ரூ. 67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடம் இருந்து ரூ. 67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது. அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், அனுமதி இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 48 லாரி, 34 ஆட்டோ உள்ளிட்ட 158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனத் தணிக்கை தொடா்ந்து நடைபெறும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →